காஜியாபாத்,:தன் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த ஆராய்ச்சி மாணவரைக் கொன்று, உடலை துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் கால்வாயில் வீசிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காஜியாபாதின் மோடி நகரில் அன்கித் கோகர் என்ற இளைஞர் வாடகை வீட்டில் வசித்து வந்தார்; லக்னோ பல்கலையில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார்.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் அவர் திடீரென மாயமானார். அவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் அவருடைய நண்பர்கள் பரிதவித்தனர். அவருடைய ‘மொபைல் போனை’ அழைத்தால் பதில் ஏதும் இல்லை.
அதே நேரத்தில், அந்த எண்ணில் இருந்து, நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுஞ்செய்திகள் மட்டும் வந்தன.
இதையடுத்து, அன்கித் கோகரின் நண்பர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் உமேஷ் சர்மாவிடம் போலீசார் விசாரித்தபோது, அன்கித் நீண்ட நாட்களாக வரவில்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர் அன்கித் கோகரின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். இதனால், அவர் மோடி நகரில் தனியாக வசித்து வந்தார். பாக்பத்தில் உள்ள குடும்பத்துக்கு சொந்தமான பழைய வீட்டை விற்றதில் 1 கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது.
இதில், வீட்டின் உரிமை யாளருக்கு ௪௦ லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். மீதி உள்ள பணத்தையும் பறிக்க உமேஷ் சர்மா திட்டமிட்டார். இதையடுத்து, தன் நண்பர் பர்வேஷ் உடன் இணைந்து, அன்கித் கோகரை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
அதன்பின், உடலை துண்டு துண்டுகளாக்கி, பல்வேறு இடங்களில் கால்வாயில் வீசியுள்ளார். உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளோம்.
இதற்கிடையே, மாணவரின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் இருந்து, ௨௦ லட்சம் ரூபாய் வரை பணத்தை எடுத்துள்ளனர்.
அன்கித் காணாமல் போனதாக புகார் வந்தால், போலீசை குழப்பும் வகையில், அவருடைய மொபைல் போனுடன் பல்வேறு இடங்களுக்கு பர்வேஷ் பயணம் செய்து உள்ளார்.
இந்த வழக்கில் வீட்டின் உரிமையாளர் உமேஷ் சர்மா, அவருடைய நண்பர் பர்வேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்