புதுடில்லி’பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ள மோசமான கருத்து, அந்நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. பாக்., அரசால் உருவாக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நேற்று முன்தினம் பேசுகை யில், குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
பிலாவல் புட்டோவின், இந்த மிக மோசமான கருத்து அவருக்கு மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கே மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் 1970 களில் வங்காளிகளும், ஹிந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டனர். 1971ல் நடந்த இந்தியா – பாக்., போரில், டிச., 16ல் நாம் வெற்றி பெற்றோம். அந்த தோல்வியை பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் இன்னும் மறக்கவில்லை.
இன்றும் அங்கு வசிக்கும் சிறுபான்மையினர் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். அப்படி இருக்கையில் இந்தியா குறித்து கருத்து தெரிவிக்கும் தகுதி பாகிஸ்தானுக்கு இல்லை.
பாக்., ஆதரவு பெற்ற, பாக்., அரசால் துாண்டிவிடப்பட்ட பயங்கரவாத குழுக்கள் நடத்திய தாக்குதலின் வடுக்களை நியூயார்க், மும்பை, புல்வாமா, பதான்கோட், லண்டன் உள்ளிட்ட நகரங்கள் இன்னும் சுமந்து கொண்டிருக்கின்றன.
பாக்., இந்த பயங்கரவாத குழுக்களை தங்கள் நாட்டில் வளர்த்து, அவற்றை உலகம் முழுதும் ஏவி விடுகிறது. பாக்., அரசால் உருவாக்கப்படும் இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
இந்தியாவுக்கு எதிராக, பயங்கரவாத குழுக்களை பயன்படுத்த முடியாத நிலையில் பாக்., உள்ளது. இந்த விரக்தியை தான் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இப்படி வெளிப்படுத்தி உள்ளார்.
பாக்., ஒசாமா பின் லேடனை தியாகியாக கொண்டாடுகிறது. லக்வி, ஹபீஸ் சயீத், மசூத் அசார், சஜித் மிர், தாவூத் இப்ராஹிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிறது.
ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட 126 பயங்கரவாதிகள், 27 பயங்கரவாத குழுக்களை பாதுகாக்கும் பெருமை, பாக்.,கை தவிர வேறு எந்த நாட்டுக்கும் கிடையாது.
பயங்கரவாதி அஜ்மல் கசாபின் துப்பாக்கி குண்டுகளில் இருந்து, 20 கர்ப்பிணி பெண்களை உயிர் பிழைக்க வைத்த மும்பையைச் சேர்ந்த நர்ஸ் அஞ்சலி குல்தே தன் அனுபவங்களை ஐ.நா., சபையில் நேற்று முன்தினம் பகிர்ந்தார்.
இதை பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் கேட்டிருப்பார் என நம்புகிறோம். இந்த பாவத்தில் தங்களுக்கு பங்கு இல்லை என்பதை நிறுவுவதில் அவர் முனைப்பாக உள்ளார்.
பாகிஸ்தான் தன் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அந்நாடு முற்றிலுமாக ஒதுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனதும் திவால்!
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பயன்படுத்தும் மொழி, அவர் திவாலான நாட்டை சேர்ந்தவர் என்பதை மட்டுமின்றி, மனதளவிலும் அவர் திவாலானவர் என்பதையே உணர்த்துகிறது.
மீனாட்சி லேகி, வெளியுறவுத் துறை இணை அமைச்சர், பா.ஜ.,
கேடுகெட்ட திட்டம்!
பயங்கரவாதத்தை வளர்க்கவும், பாதுகாக்கவுமே பாக்., மண் பயன்படுகிறது. அவர்களின் கேடுகெட்ட திட்டங்கள் இந்த உலகிற்கே வெட்ட வெளிச்சமாக தெரியும்.
அனுராக் தாக்குர், மத்திய தகவல் – ஒலிபரப்புத் துறை அமைச்சர், பா.ஜ.,
‘பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்’
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு தந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லாகூர் வீட்டு வாசலில் கடந்த ஆண்டு ஜூன் 23ல் வெடிகுண்டு வெடித்த சம்பவத்துக்கு இந்தியாவின் சதியே காரணம் என, பாக்., சமீபத்தில் வெளியிட்ட ஆவணத்தை படித்தேன். இந்த நேரத்தில் ஒரு சம்பவத்தை நினைவுகூற விரும்புகிறேன். கடந்த 2011ல், அமெரிக்காவின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பாகிஸ்தான் வந்தார். இப்போதைய பாக்., வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர் அப்போது அமைச்சராக இருந்தார். அவரை அருகில் வைத்துக் கொண்டே ஹிலாரி பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘நம் வீட்டு கொல்லைப்புறத்தில் பாம்புகள் வளர்த்தால், அது பக்கத்து வீட்டுக்காரரை மட்டுமே கடிக்கும் என எதிர்பார்க்க முடியாது. நிச்சயம் ஒரு நாள் அது நம்மையும் கடிக்கும்’ என்றார். எப்போதும் போல பாகிஸ்தான் அந்த அறிவுரையை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அங்கு இன்று என்ன நடக்கிறது என்பதை அனைவரும் கண்கூடாக பார்க்கிறோம்.பாகிஸ்தானை, உலக நாடுகள் பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கின்றன. கடந்த இரண்டரை ஆண்டு கால கொரோனா பாதிப்பால் பல்வேறு விஷயங்கள் மறக்கடிக்கப்பட்டு வரு கின்றன. ஆனால், தங்கள் நாட்டில் பயங்கரவாதத்தை வளர்த்து, அதை பிற நாடுகள் மீது ஏவி விடும் வேலையை யார் செய்து வருகின்றனர் என்பதை உலகம் இன்னும் மறக்கவில்லை.எனவே, இதுபோன்ற கற்பனை கதைகளை அவர்கள் கட்டவிழ்த்து விடு வதற்கு முன், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.விவாதத்தை திசை திருப்புவதன் வாயிலாக எதையும் மறைத்துவிட முடியாது. யாரையும் இனி குழப்ப முடியாது. நீங்கள் யார் என்பது இந்த உலகுக்கே தெரியும். எனவே, பயங்கரவாத செயல்களை கைகழுவிவிட்டு சிறந்த அண்டை நாடாக மாற பாக்., முயற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்