புதுடில்லி, :’குளிர்கால விடுமுறை என்பதால் இன்று முதல், அடுத்த மாதம் 1ம் தேதிவரை, உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வுகள் எதுவும் செயல்படாது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமர்வுகள் செயல்படும்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:இன்று முதல், அடுத்த மாதம் 1ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு குளிர்கால விடுமுறை.
இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வுகள் எதுவும் செயல்படாது. ஜன., 2 முதல் வழக்கம்போல் அமர்வுகள் செயல்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த விடுமுறை காலத்தில் மிக மிக அத்தியாவசியமான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும்.
நீதிபதிகள் நியமன விஷயத்தில் கொலீஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது.நேற்று முன்தினம் பார்லிமென்டில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றங்களுக்கு தொடர்ச்சியான விடுமுறைகள் அறிவிக்கப்படுவதும் இதற்கு முக்கிய காரணம்’ என்றார். ஆனாலும், கடுமையான பணி நெருக்கடியில் இருப்பதால் நீதிபதிகளுக்கு ஓய்வு அவசியம் என, பல நீதிபதிகள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர்.
அவசியம்
முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஜூலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:
நீதிபதிகள் அதிக வசதிகளுடன் வசிப்பதாகவும், காலை 10:00 மணியில் துவங்கி, மாலை 4:00 மணி வரை மட்டுமே வேலை பார்ப்பதாகவும், விடுமுறையை அனுபவிப்பதாகவும் மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது; இது உண்மையல்ல.
வழக்கு விசாரணை தொடர்பாக வார விடுமுறையின்றியும், விடுமுறை இன்றியும் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நெருக்கடி நீதிபதிகளுக்கு உள்ளது.இதனால் வாழ்வின் பல சந்தோஷங்களை இழக்கிறோம். எனவே, நீதிபதிகளுக்கு விடுமுறை அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement