ஆன்லைன் ரம்மியில் ரூ.1 கோடி இழந்ததாக வாலிபர் தற்கொலை முயற்சி

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜய் (33), பி.காம்., படித்து விட்டு, தந்தைக்கு துணையாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மாதாந்திர சீட்டும் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், விஜய் வீட்டில் இருந்த போது, தினமும் ஆன்லைன் ரம்மியை விளையாடி வந்துள்ளார். இதில், ரூ.1 கோடி வரை அவர் பணத்தை இழந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ அனுப்பியுள்ளார்.

அதில், ‘ஆன்லைன் ரம்மியில் ரூ.1 கோடி வரை பணத்தை இழந்து விட்டதால், நான் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். ஆன்லைன் ரம்மிக்கு எனது மரணம் கடைசியாக இருக்கட்டும். உதயநிதி அண்ணா, உங்களை கெஞ்சி கேட்கிறேன், ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்’ என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்தனர். அப்போது, அருகில் இருந்த கிணற்றில் குதிக்க முயன்ற விஜயை, உடனடியாக தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினர். இந்த வீடியோவை பார்த்த ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.