மாறாத அன்பு ; தீராத காதல் – மரணத்திலும் ஒன்றிணைந்த தம்பதிகள்!

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சாலை பகுதியில் வசித்துவந்த ரங்காச்சாரியார் (87), ராஜேஸ்வரி (78) தம்பதிகளுக்கு திருமணமாகி 60 ஆண்டுகள் கடந்துவிட்டன.

நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் தொடங்கிய இவர்களது வாழ்க்கைக்குக் கிடைத்த அன்பு பரிசாக நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மற்றும் பேரக்குழந்தைகளோடு கூட்டுக் குடும்பத்தில் வசித்துவந்த இந்த தம்பதிகள் இன்றைய தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ளனர்.

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பதற்கேற்ப இவர்களது குடும்பம் மட்டற்ற மகிழ்ச்சியிலும் அளவுக்கடந்த ஆனந்தத்திலும் திகழ்ந்துவந்தன. திருமணம் ஆன காலத்தில் இருந்து இவர்கள் இருவரும் உறவினர்கள் வீட்டு திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு இணைப்பிரியா தம்பதிகளாக கைகோர்த்து சென்று வந்துள்ளனர். 

வயது முதிர்ந்த இத்தம்பதிகளிடம்  ஆசி வாங்குவதற்காக உறவுகளிடையே போட்டா போட்டி ஏற்படுவதுண்டாம். காலம் நகர்ந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜேஸ்வரி இருதய நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து கடந்த வியாழக்கிழமை அன்று (டிச. 15) வீடு திரும்பிய ராஜேஸ்வரியை வெள்ளிக்கிழமையன்று (டிச. 16) மரணம் ஆரதழுவிக்கொண்டது. ஆம், அவரது உயிர் உடலைவிட்டு பிரிந்தது.  இந்நிலையில், உயிருக்கு உயிரான மனைவியின் பிரிவை தாங்கிக் கொள்ள இயலாத அவரது கணவர் ரங்காச்சாரியார் அக்கணமே மயங்கி கீழே விழுந்துள்ளார். விழுந்தவர் எழுந்திருக்கவேவில்லை. 
ஆம்…! அக்கணமே அவரது உயிரும் பிரிந்துவிட்டது.

திருமணமாகி 60 ஆண்டுகள் கடந்த நிலையில் இணைப் பிரியா தம்பதிகளான ரங்காச்சாரியாரும் ராஜேஸ்வரியும் மரணத்திலும் ஒன்றிணைந்து இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டனர். கணவன் – மனைவி இருவருக்குள்ளும் இருந்த மாறாத அன்பும் தீராத காதலும் அவர்கள் இருவரையும் மரணத்திலும் ஒன்றிணைத்திருப்பது உண்மை காதலின் வெளிப்பாடாகும்.

இறுதி காலத்திலும் இணைப்பிரியா தம்பதிகளான இவர்களுக்கு உறவுகளும் ஊர் மக்களும் கனத்த இதயத்தோடு கண்ணீரை காணிக்கையாக்கி விட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.