புதுடில்லி : அமெரிக்காவில் நடந்த திருமதி உலக அழகி போட்டியில், இந்தியாவின் சர்கம் கவுஷல், 31, பட்டம் வென்றார்.
திருமணம் ஆன பெண்களுக்கான உலக அழகி போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த 1984ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அதிதி கோவித்ரிகர், 2001ல் பட்டம் வென்றார்.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று நடந்தது. 63 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் பங்கேற்றனர். இதில், ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கவுஷல், இந்தியா சார்பில் பட்டம் வென்றார்.
இதையடுத்து, 21 ஆண்டுகளுக்கு பின், திருமதி உலக அழகி பட்டத்தை மீண்டும் இந்தியா வென்றுள்ளது.
கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஷாலின் போர்டு, சர்கம் கவுஷலுக்கு அழகி பட்டத்துக்கான கிரீடத்தை அணிவித்தார்.
மத்திய மற்றும் தெற்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவு நாடான பாலினேஷியாவைச் சேர்ந்த அழகி இரண்டாம் இடத்தையும், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அழகி மூன்றாம் இடத்தையும் வென்றனர்.
பட்டம் வென்றுள்ள சர்கம், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஆசிரியையாக பணியாற்றி உள்ளதாகவும், அவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement