தமிழகத்தில் அமல்படுத்தபட்டுள்ள பிளாஸ்டிக் தடை சட்டம் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பாதகமாகவும், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா திறந்து வைத்து நீலகிரி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பேசிய விக்ரம ராஜா நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வு பிரச்சினை தொடர்வதாகவும், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளின் வாடகை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு வழிகாட்டு கமிட்டி அமைத்துள்ளதாகவும் அந்த குழுவில் மாநில அளவிலான வணிகர்கள் சங்க தலைவர்கள் இடம் பெற்று இருப்பதாகவும் விரைவில் அவர்கள் வாடகை பிரச்சினைக்கு தீர்வு காண இருப்பதால் அதிகாரிகள் வாடகை கேட்டு வணிகர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.