தாசில்தாரை தாக்கியதாக 2011ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு! நீதிமன்றத்தில் மு.க. அழகிரி ஆஜர்

மதுரை: 2011ஆம் ஆண்டு  சட்டப்பேரவை தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க. அழகிரி உள்பட 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலின் உள்ளே வைத்து கிராம தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன.

இதையடுத்து தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக அழகிரி பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேலூர் தேர்தல் அலுவலரும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், விடியோ கேமராமேனுடன் அங்கு சென்று விடியோ எடுத்தனர்.

இதற்கு அழகிரி தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி டீலா பானு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.அழகிரி முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகி களான ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம்,ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் உள்பட 20 பேர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 6ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்னதாக, மேலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தற்போது மேலூர் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.