ஸ்ரீநகர், பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஜம்மு – காஷ்மீருக்குள் போதைப் பொருள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில், ஐந்து போலீசார் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாக்., பயங்கரவாதிகள், போதைப் பொருள் கடத்தல் வாயிலாக, தங்கள் குழுக்களுக்கு தேவையான நிதியை திரட்டுகின்றனர்.
பாக்.,கில் இருந்து, எல்லை வழியாக ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவும் போதை பொருள், போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
![]() |
சுற்றிவளைப்பு
இந்த போதை பொருள் கடத்தலுக்கு, எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் சிலரும் உதவியாக உள்ளனர். குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படை எஸ்.ஐ., ரோமேஷ் குமார் என்பவர், போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இவரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். இவரிடமிருந்து, பயங்கரவாத குழுக்களிடம் இருந்து பெறப்பட்ட 91 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
குறிப்பாக பாக்., எல்லை அருகே அமைந்துள்ள குப்வாரா மாவட்டம் வழியாக தான் போதைப் பொருள் காஷ்மீருக்குள் நுழைகிறது. இங்கு மட்டும், இந்த ஆண்டில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 161 பேர் மீது, 85 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், குப்வாராமாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இது குறித்து குப்வாரா மாவட்ட எஸ்.பி., யூகல் குமார் மன்ஹாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குப்வாராவின் கேரான் செக்டார் வழியாக தான் போதைப் பொருள் உள்ளே நுழைகின்றன. கேரான் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள சிலரை அடையாளம் கண்டு, அவர்களை சுற்றி வளைத்து விசாரணைநடத்தினோம்.
அப்போது போதைப் பொருள் கடத்தும் கும்பல் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
விசாரணை
கேரான் பகுதியை சேர்ந்த ஷகிர் அலி கான் என்பவர் இப்போது பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளார். அங்கிருந்து போதைப் பொருட்களை கேரானில் உள்ள தன் மகன் தம்ஹீத் அகமதுவுக்கு அனுப்பி வைக்கிறார்.
இவரிடம் இருந்து தான் குப்வாரா முழுதும் போதைப் பொருள் வினியோகம் நடக்கிறது.
சமீபத்தில், பாக்.,கில் இருந்து இவருக்கு 5 கிலோ ஹெராயின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 2 கிலோவை கைப்பற்றி விட்டோம்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து போலீசார் உட்பட 17 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து மேலும் பல தகவல்களை பெற விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு – காஷ்மீரில் சோதனை
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஜம்மு – காஷ்மீரின் பல இடங்களில், தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று சோதனை நடத்தினர். இதுகுறித்து, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஜம்மு – காஷ்மீரில் செயல்படும் சில அமைப்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்க சதி திட்டம் தீட்டியது தொடர்பாக, ஜம்முவில் உள்ள என்.ஐ.ஏ., போலீஸ் ஸ்டேஷனில், ஜூன் 21ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறுபான்மையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட இந்த சதி தொடர்பாக விசாரித்து வந்த என்.ஐ.ஏ., ஜம்மு – காஷ்மீரின் 14 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தியது. ஜம்மு, குல்காம், புல்வாமா, அனந்தநாக் மற்றும் சோபூர் மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், எலக்ட்ரானிக் சாதனங்கள், மொபைல் போன் சிம் கார்டுகள் சிக்கியுள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்