டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி vs பாஜக… அரங்கேறும் கடைசி நேர ட்விஸ்ட்!

15 ஆண்டுகால பாஜகவின் தொடர் ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 இடங்களை பிடித்து புதிய சாதனை படைத்தது. பாஜக 104 இடங்களில் வென்று இடண்டாம் இடம் பிடித்தது. இதையடுத்து வரும் ஜனவரி 6ஆம் தேதி மாநகராட்சியின் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இன்று கடைசி தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் அடுத்த மேயர்?

வழக்கமாக எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்கள் ஓட்டு போட்டு மேயர், துணை மேயரை தேர்வு செய்வர். அந்த வகையில் ஆம் ஆத்மிக்கு தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதையொட்டி கிழக்கு படேல் நகர் கவுன்சிலர் ஷெல்லி ஓபராயை மேயர் பதவிக்கும், சந்தனி மகால் கவுன்சிலர் ஆலே முகமது இக்பாலை துணை மேயர் பதவிக்கும் அக்கட்சி நிறுத்தியுள்ளது. இவர்கள் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வெற்றி உறுதி

இதுதொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளரும், எம்.எல்.ஏவுமான சவுரப் பரத்வாஜ், எங்கள் கட்சியை சேர்ந்த அனைவரது வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாகவும், ஆதரவாளர்கள் சார்பாகவும் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவதாக தெரிவித்தார்.

பாஜக வச்ச செக்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேயர், துணை மேயர் பதவிக்கான போட்டி ஓபன் ரேஸாக இருக்கிறது என்று பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா தெரிவித்தது கவனம் பெற்றது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில், அடுத்து டெல்லி மேயர் தேர்தலை நோக்கி நகர்வோம். வாக்கு எண்ணிக்கையில் யார் அதிகபட்ச எண்ணிக்கையை நோக்கி நெருங்கி வருகிறார்களோ? அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

சண்டிகர் சம்பவம்

உதாரணத்திற்கு சண்டிகரில் பாஜக மேயர் எனக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, சண்டிகர் மேயர் பதவிக்கு பாஜக சார்பில் சரப்ஜித் கவுர், ஆம் ஆத்மி சார்பில் அஞ்சு கத்யால் ஆகியோர் நிறுத்தப்பட்டனர். இதில் இருவரும் தலா 14 வாக்குகள் பெற்ற நிலையில் அஞ்சு கத்யாலுக்கு விழுந்த வாக்குகளில் ஒன்று செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடைசி நேர ட்விஸ்டாக பாஜக வெற்றி பெற்றது.

கடைசி நேர ட்விஸ்ட்

ஆனால் இது ஜனநாயக படுகொலை என்றும், சட்டவிரோதமாக பாஜகவின் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாவும் ஆம் ஆத்மி தரப்பு குற்றம்சாட்டியது. அந்த வகையில் டெல்லியிலும் ஏதேனும் கடைசி நேர ட்விஸ்ட்கள் அரங்கேறப் போகிறதா? இதையொட்டி பின்னணி அரசியல் ஆபரேஷன் ஏதாவது ஒன்றை பாஜக நிகழ்த்தப் போகிறதா? எனக் கேள்விகள் எழுகின்றன.

எழும் சந்தேகம்

இந்த சூழலில் தான் ஷாலிமர் பாக் வார்டு கவுன்சிலர் ரேகா குப்தாவை மேயர் பதவிக்கும், ராம் நகர் வார்டு கவுன்சிலர் கமால் பாக்ரியை துணை மேயர் பதவிக்கும் பாஜக நிறுத்தியுள்ளது. தனது அரசியல் ஆபரேஷனை டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக களமிறக்கி விடுமா? அடுத்து நடக்கப் போவது என்ன? என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.