ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாண்டாம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர்கள் சுரேஷ் – ஜான்சிராணி தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ஜான்சி ராணி மீண்டும் கர்ப்பமானார்.
இந்நிலையில், அவருக்கு கடந்த நான்காம் தேதி சிவகிரி அரசு மருத்துவமனையில், பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவத்தின் போது குழந்தை நஞ்சினை குடித்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் குழந்தையை எட்டு நாட்கள் சிகிச்சையில் வைத்திருந்தனர்.
அதன் பின்னர் சிகிச்சை முடிந்து குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றதும் மீண்டும் குழந்தைக்கு சளி மற்றும் முச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் குழந்தையை கொண்டு சென்றனர்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் டானிக் கொடுக்குமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று ஜான்சிராணி வழக்கமாக குழந்தைக்கு பால் கொடுத்து கட்டிலில் படுக்க வைத்து விட்டு சமையல் செய்வதற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் வந்து குழந்தையை பார்த்தபோது குழந்தை எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்தது.
இதைப்பார்த்து பதறிய பெற்றோர்கள் குழந்தையை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிறந்த 26 நாட்களிலே குழந்தை இறந்ததால் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும், சுகாதாரத்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்புதான் குழந்தை மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவரும்.