சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், சிதம்பரம் நடராஜர்கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், சுசீந்தரம் தாணுமாலய சுவாமி, ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமிகோயில், மருதமலை முருகன் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், திருபரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருப்பள்ளி எழுச்சிக்குப் பிறகு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தங்க நாணயகவச அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிமுதல் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதேபோல, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை வழிபட்டனர்.
மேலும், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், திருநீர்மலை ரங்கநாதர் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயில் உட்பட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.
அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கோயில் நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர், அண்ணாநகர், பெரம்பூர், பரங்கிமலை, மாதவரத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், செயின்ட் கதிட்ரல் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி, சிந்தாதிரிப்பேட்டை சியோன், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.