2023-ல் 10 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்.!…

புதிதாக பிறந்துள்ள 2023-ம் ஆண்டில், அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.

2023 ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், நாகாலந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 3 மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது.

 

இந்த மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. நாகாலந்து மாநிலத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியும் ஆட்சி நடத்துகின்றன.

3 மாநிலங்களை தொடர்ந்து, கர்நாடகாவில் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு சட்டசபை பதவிக்காலம் மே 24-ந் தேதி முடிவடைகிறது. கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.

 

ஆண்டின் பிற்பாதியில் மிசோரம், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இம்மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது.

5 மாநிலங்களிலும் தேர்தல் ஒன்றாகவே நடக்க வாய்ப்புள்ளது. மத்தியபிரதேசத்தில் பாரதிய ஜனதாவும், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதியும் ஆட்சி நடத்துகின்றன.

 

மேற்கண்ட 9 மாநிலங்களுடன் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அங்கு 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை.

 

கடந்த நவம்பர் 25-ந் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு கோடை காலத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு நிலவரத்தை பொறுத்து, தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு, இந்த சட்டசபை தேர்தல்கள் முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.