வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு தொகை? அரசு எடுக்கும் முடிவு!

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர்களால் ஜனவரி மாதம் 14ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது.

அந்த வகையில், நடப்பாண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.1000 ரொக்கத்துடன் சேர்த்து முழு கரும்பு ஒன்றை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 9ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா? என்பது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 20 வகையான விவசாயப் பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பும், வேஷ்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.

இந்த வேஷ்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன. கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், அந்த கடைகள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடையாமல், பரிசுத்தொகுப்பினை பெறுவோரும் திருப்தி அடையாத நிலை உள்ளது. இதற்கு மாற்றாக தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். தரமான பொருட்களும் கிடைக்கப் பெற்று, பரிசு தொகுப்பு பெறுவோரும் மகிழ்ச்சி அடைவார்.

இதனை பரிசீலிக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பொங்கல் பரிசு ரொக்கத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவது பற்றியும் வாதவிவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “குறுகிய காலமே இருப்பதால் வங்கி கணக்குகளில் செலுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பது கடினம். மேலும், மினிமம் பேலன்ஸ் எனக்கூறி சில வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அதோடு, மூன்று வகையான ரேஷன் கார்டுகள் இருப்பதால், அவற்றை பிரிப்பதிலும் சிக்கல் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் மின் இணைப்புகளோடு ஆதாரை இணைக்கும் பணியை போல, இந்த பணியையும் செய்யலாமே? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டு தாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா? என்பது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.