`நல்ல சமயம்' சினிமாவில் போதைப் பிரசாரம்? தியேட்டரிலிருந்து திரும்பப்பெற்ற படம் ஓ.டி.டி-யில் ரிலீஸ்!

நடிகை பிரியா வாரியாரைக் கதாநாயகியாகக்கொண்டு ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிப் பிரபலமானவர் இயக்குநர் ஒமர் லுலு. இப்போது இவர் ‘நல்ல சமயம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்துக்கு சென்சார்பொர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருந்தது. படத்தின் டிரெய்லர் கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு வெளியானது. அதில் மது குடித்தும் கிடைக்காத கிக் ஒரு குறிப்பிட்ட குட்கா பாக்கை உண்பதால் கிடைப்பதாகவும், அதன் மூலம் மகிழ்ச்சி, ஃபுல் அன் ஃபுல் எனர்ஜி கிடைப்பதாகவும் ஓர் இளம் பெண் கூறும் வசனமும், அந்த குட்காவைப் பயன்படுத்தும் காட்சியும் இடம்பெற்றிருந்தன.

நல்ல சமயம் சினிமா

‘நல்ல சமயம்’ திரைப்படம் கடந்த 30-ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. அந்தப் படத்தில் கதை ஒன்றும் பெரிதாக இல்லை என்றும், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதாகவும், இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளதாகவும் விமர்சனங்கள் வந்தன.

இந்த நிலையில் ’நல்ல சமயம்’ படம் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறி சினிமா இயக்குநர் ஒமர் லுலு மீதும், தயாரிப்பு நிறுவனமான கலந்தூர் என்டர்டெயின்மென்ட்ஸ் மீதும் கோழிக்கோடு ரேஞ்ச் எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் சுதாகரன் கடந்த 30-ம் தேதி வழக்கு பதிவு செய்தார்.

நல்ல சமயம் சினிமா இயக்குகுநர் ஒமர் லுலு

’நல்ல சமயம்’ திரைப்படம் குறித்துப் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், கேரள கலால் சட்டத்தில் 55-ன் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எக்ஸைஸ் போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் எக்ஸைஸ் துணை கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த இயக்குநர் ஒமர் லுலு, “‘நல்ல சமயம்’ படத்தை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டதில் சந்தோஷம். என்னை போலீஸ் ஏற்றெடுக்கும். ஜாமின் எடுத்துவிட்டு வருகிறேன் மக்களே” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி தியேட்டர்களில் இருந்து அந்தப் படத்தைத் திரும்பப்பெறுவதாக ஒமர் லுலுவே அறிவித்திருந்தார்.

ஒமர் லுலு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “‘நல்ல சமயம்’ படத்தை தியேட்டர்களிலிருந்து திரும்பப்பெற்றுக்கொள்கிறோம். மீதியுள்ள விஷயங்கள் கோர்ட் தீர்ப்பின்படி…” என அறிவித்திருந்தார். தியேட்டரில் ரிலீஸ் செய்த திரைப்படம் திரும்பப்பெறப்படுவது ஓர் அரிதான நிகழ்வாகும். இதையடுத்து தயாரிப்பாளரின் நிலை குறித்துப் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

நல்ல சமயம் பட நடிகைகளுடன் இயக்குநர் ஒமர் லுலு

அதற்குப் பதிலளித்த ஒமர் லுலு, “பலர் தயாரிப்பாளரின் நிலையை எண்ணி பதற்றமாவதை அறிந்தேன். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். ‘நல்ல சமயம்’ படத்தை ஷூட் செய்ய 16 நாள்களே ஆயின. செலவு ஒருகோடி ரூபாய் ஆனது. இப்போது ஓ.டி.டி அதற்கும் அதிகமான தொகைக்கு படத்தைக் கேட்கிறது. கோர்ட் உத்தரவுக்குப் பிறகு ஓ.டி.டி-யில் அந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.