தகுதியில்லாத கலைமாமாணிகள் பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைப்போம்: வாகை சந்திரசேகர் தகவல்

தமிழக அரசால் வழங்கப்படுவது கலைமாமணி விருது, இதற்கு சான்றிதழ் தங்கப் பதக்கம் என மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. அரசுக்கு, ஆளும்கட்சியினருக்கும் வேண்டியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு.

இந்த நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தகுதியில்லாதோருக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2019 – 2020ம் ஆண்டில் வழங்கிய கலைமாமணி விருதுகள் தொடர்பாக புதிய தேர்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

கலைமாமணி விருதுகளை தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றமே வழங்கி வருகிறது. தற்போது இதன் தலைவராக பொறுப்பேற்றுள்ள நடிகர் வாகை சந்திரசேகர் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபிறகு, கலைமாமணி விருதுகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. விருதாளர்களும் தேர்வு செய்யப்படவில்லை. ஏனென்றால், இயல் இசை நாடக மன்றத்துக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. சில சட்டசிக்கல்கள் இருந்ததால், அதை செய்யவில்லை. எனவே இந்தச் சிக்கல் தீர்ந்த பிறகுதான், குழு அமைத்து கலைமாமணி விருதாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும்.

தமிழக அரசைப் பொறுத்தவரை, சரியான – திறமையான தகுதியான நபர்களைத்தான் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது. அதேபோல், உயர் நீதிமன்றம் கூறியுள்ள வல்லுநர் குழுவை நிர்ணயம் செய்து, இதுவரை கலைமாமணி வாங்கியதில் தகுதியானவர்கள் மற்றும் தகுதியில்லாதவர்கள் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றத்தில் கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.