இளையான்குடி அருகே சமூக ஆர்வலரை காரில் கடத்திச் சென்று கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இருவரை கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் வசித்து வருபவர் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன். இவர், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்க இளையான்குடியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மணல் அள்ளுவதற்கு தடை பெற்றுள்ளார். இதையடுத்து மணல் அள்ள முடியாமல் வெறுப்பில் இருந்த மணல் திருடர்கள், கடை வீதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ராதாகிருஷ்ணனை வழிமறித்துள்ளனர்.

பின் அவரை காரில் கடத்திச் சென்று அடித்து உதைத்து பின்னர் பஞ்சனூர் கிராமம் அருகே உள்ள மரத்தில் தூக்கிலிட முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு வந்த அந்த பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் இதனை பார்த்து விடவே, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணனை அப்படியே விட்டுவிட்டு மணல் திருடர்கள் தப்பியோடி உள்ளனர். பின்னர் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் சாலைகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் ஆரம்பக் கோட்டையைச் சேர்ந்த பாலுசாமி, வருந்தியைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகியோரை கைது செய்துள்ள காவல் துறையினர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வாதவனேரி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரை தேடி வருகின்றனர். மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட சமூக ஆர்வலரை கொள்ளையர்கள் கடத்திச் சென்று கொலை செய்ய முயன்ற சம்பவம் பொது மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM