பெங்களூரு: நான் நன்றியுள்ள நாய்போல் மக்களுக்கு சேவை செய்வேன் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். கர்நாடகா முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா பேசும்போது, `காங்கிரஸ் தலைவர்களின் தைரியம் குறித்து பேசும் முதல்வர் பசவராஜ்பொம்மை, டெல்லிக்கு சென்றால் பிரதமர் மோடி முன்னிலையில் பப்பி (நாய்க்குட்டி) போல் நடுங்கி உடல் நடுங்கி நிற்கிறார்’ என்று விமர்சனம் செய்தார்.
முதல்வர் பொம்மையை நாயுடன் ஒப்பிட்டு சித்தராமையா பேசியதற்கு பாஜவினர் கடும் கோபத்தில் உள்ளனர். சித்தராமையாவுக்கு எதிராக அமைச்சர்கள் ஆர்.அசோக், அஷ்வத் நாராயண், சுதாகர், முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக டிவிட்டரிலும் இரு கட்சியினரின் விமர்சனங்கள் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அதே பல்லாரி மாவட்டத்தில் நேற்று மாவட்ட தாய்-சேய் நல மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் முதல்வர் பொம்மை கூறும்போது, `உலகில் நன்றியுள்ள பிராணியாக நாய் உள்ளது. என்னை அதனுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியுள்ளார். மாநில மக்களுக்கு நன்றியுள்ள நாயாக இருந்து நான் சேவை செய்வேன். சித்தராமையா இப்படி பேசி இருப்பதின் மூலம் அவரது தரம் என்னவென்பதை வெளிப்படுத்தி உள்ளார்’ என்றார்.