கடந்த டிசம்பர் 31-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் மா.சு., திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் பாதுகாப்புப் பணியிலிருந்த 22 வயதான இளம் பெண் காவலரிடம் அங்கிருந்த இளைஞர்கள் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் காவலர் கதறி அழுதுகொண்டே தனக்கு நடந்த சம்பவத்தைத் தனது மேல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர் காவல் ஆய்வாளர் உடனடியாக, அங்கிருந்த தப்பிய முயன்ற இருவரையும் மடக்கிப் பிடித்தார்.
விசாரணையில், அவர்கள் இருவரும் சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன்(23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24) என்பதும். அவர்கள் இருவரும் திமுக 129-வது வட்ட இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் செல்ல முற்படும்போது அங்கிருந்த திமுகவினர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக சொல்லப்பட்டது.

காவலர்களும் வேறு வழியெதுவும் இல்லாது பிடித்தவர்களை விட்டுவிட்டார்கள். இந்த விவகாரம் வெளியே வர ஆளும் கட்சியின் கூட்டத்தில் பெண் காவலருகே பாதுகாப்பு இல்லை என்று கடுமையான கண்டனங்களை எழுந்தது. இந்த விவகாரம் குறித்து பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு துணை ஆணையர் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த இரண்டு திமுக நிர்வாகிகளும் துணை ஆணையர் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்கள்.
அப்போது, `கூட்ட நெரிசலில் பெண் காவலர் மீது தவறுதலாக கை பட்டிருக்கலாம். எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை’ என்று சொல்லி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, பெண் காவலரும் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று சொல்லி இரண்டு தரப்பினரும் சமாதானமாகச் செல்வதாகவும், பெண் காவலர் தான் கொடுத்த புகாரை திரும்பப்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்தான், நேற்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் என்ற இருவரையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டது. மேலும், நேற்று இரவு, விருகம்பாக்கம் பகுதி போலீஸார் பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் தொந்தரவு அளித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.