கோவை மாவட்டத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்தி அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் வடபுதூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (47). இவரது தம்பி ஆறுசாமி (42). இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணமான நிலையில், இவர்களது மனைவி, குழந்தைகள் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இதனால் அண்ணன்-தம்பி மட்டும் வடபுதூரில் தனித்தனி வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலிங்கத்தின் தங்க நகைகளை அடகு வைத்து அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தனர். இதையடுத்து வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் தம்பி ஆறுச்சாமி லாபத்தில் மட்டும் தான் பங்கு வேண்டும், நஷ்டத்தில் வேண்டாம் என்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தின இரவு இருவருக்கும் இடையே மீண்டும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆறுச்சாமி கிரிக்கெட் மட்டையால் அண்ணனை தாக்கியுள்ளார். இதனால் மகாலிங்கம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தம்பி ஆறுச்சாமியை ஓட ஓட விரட்டி சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆறுச்சாமியை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே ஆறுசாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார், வழக்கு பதிவு செய்து தம்பியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பியோடிய அண்ணன் மகாலிங்கத்தை கைது செய்தனர்.