கொரோனா தாக்கிய ஆண்களின் விந்து பாதிப்பு – ஆய்வில் வெளியான ஷாக் நியூஸ்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து தரம் பாதிக்கப்படுவதாக, எய்ம்ஸ் டாக்டர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடுகளால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் பரவல் வேகம் அதிகரித்து உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையிலும், கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து டெல்லி, பாட்னா மற்றும் ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021க்கு இடையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 முதல் 43 வயதுக்கு உட்பட்ட 30 ஆண்களின் விந்தணு சோதனை என்று அழைக்கப்படும் விந்து பகுப்பாய்வு அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொற்று ஏற்பட்ட உடன் முதல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட விந்துவில், சார்ஸ்-கோவ் 2 இல்லை என்றாலும், முதல் மாதிரியில் இந்த ஆண்களின் விந்து தரம் மோசமாக இருந்தது தெரிய வந்தது.

இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகும், அதன் உகந்த நிலையை எட்ட முடியவில்லை. விந்தணுப் பகுப்பாய்வு விந்தணுவின் ஆரோக்கியத்தை விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணுக்களின் வடிவம், விந்தணுவின் இயக்கம் என்ற 3 முக்கிய காரணிகளை அளவிடுகிறது.

30 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 12 பேருக்கு (40 சதவீதம்) விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தது. இரண்டரை மாதங்களுக்கு பிறகு 3 பேருக்கு இந்த பிரச்னை இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், முதல் விந்து மாதிரியில் 30 பேரில் 10 பேரின் விந்தணுவின் அளவு 1.5 மில்லிக்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

பொதுவாக இந்த அளவானது ஒரு விந்து தள்ளலுக்கு 1.5 முதல் 5 மில்லி வரை இருக்க வேண்டும். இதே போல, விந்து திரவத்தின் தடிமன், உயிர்ச் சக்தி மற்றும் மொத்த இயக்கம் ஆகியவையும் பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர் சதீஷ் திபாங்கர் தெரிவித்தார். ஐவிஎப் மையத்தின் நிறுவனம் டாக்டர் கவுரி அகர்வால் கூறுகையில், “கொரோனா பாதிப்பு மற்றும் இனப்பெருக்க செயல்பாட்டில் அதன் விளைவுகள் குறிப்பாக ஆண் கருவுறுதல் உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.