மண்டல் vs கமண்டலம் : தொடங்குகிறது ஜாதிவாரி கணக்கெடுப்பு – யாருக்கு பயன்?

Caste Based Census : ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் துல்லியமான அளவில் இட ஒதுக்கீட்டை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 

சுதந்திர இந்தியாவில் இதுவரை ஏழு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கையை தவிர்த்து பிற சமூகங்களின் மக்கள் தொகை எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டதில்லை. மேலும், இதுகுறித்த துல்லியமான தரவுகளும் அரசிடம் இல்லை என கூறப்பட்டு வந்தது. எனவேதான், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தனியே நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.  

அந்த வகையில், பிகாரில் ஆளும் நிதிஷ் குமார் அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நாளை (ஜன. 7) முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கும் முறை 

இந்த கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட கணக்கெடுப்பு பணிகள், ஜனவரி 21ஆம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும் என கூறப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக மார்ச் மாதம் முதல், அனைத்து சாதிகள், உட்பிரிவுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 15ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வரும் கணக்கெடுப்பாளர்கள், அனைத்து மக்களின் நிதி நிலை குறித்த தகவல்களையும் பதிவு செய்வார்கள் என தெரிகிறது. 

பஞ்சாயத்து முதல் மாவட்ட அளவு வரை எட்டு நிலைகளாக இந்த கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில்,  ஒரு பகுதியாக மொபைல் அப்ளிகேஷன் மூலம் டிஜிட்டல் முறையில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த செயலியில் குடிமக்களின் இடம், சாதி, குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தொழில் மற்றும் ஆண்டு வருமானம் குறித்த கேள்விகள் இடம்பெற்றிருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாளர்களில் ஆசிரியர்கள், அங்கன்வாடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பில் உள்ள பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

முன்னதாக, பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) தவிர, வேறெந்த ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படாது என்று பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான நித்யானந்த் ராய் 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில்,  கூறியிருந்தார்.  

பீகார் முன்னெடுக்க முக்கிய காரணம்?

ஜாதிவாரி கணக்கெடுப்பை முடிப்பதற்கான காலக்கெடுவை மூன்று மாதங்களுக்கு அதாவது மே 2023 வரை நீட்டித்தது. இதன்மூலம், பெறப்படும்  தகவல்களை நலத்திட்டங்களைச் செயல்படுத்த பயன்படுத்தும் என தெரிகிறது. SC, ST அல்லாதவர்கள் தொடர்பான தரவு இல்லாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) மக்கள்தொகையை சரியாக மதிப்பிடுவது கடினம் என்று பீகார் அரசு கூறியுள்ளது.

1931ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், OBC சமூகத்தினரின் மக்கள்தொகை 52 சதவீதமாக என கணக்கிடப்பட்டது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, 2011 இல் சமூக-பொருளாதார மற்றும் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால் சாதி குறித்த தரவுகளை வெளியிடவில்லை.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக 2018, 2019ஆம் ஆண்டுகளில் பீகார் சட்டமன்றம் ஒருமனதாக இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. ஜூன் 2022இல், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் பீகாரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு அதிலும் ஒருமனதாக முடிவு செய்யப்ட்டது. 

பட்டியலிடப்பட்ட சமூகத்தினருக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், OBC சமூகத்தினருக்கு அவ்வாறு வழங்கபடவில்லை என ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பைக் கோருபவர்கள் கூறுகிறார்கள். இடஒதுக்கீடு முறை திருத்தப்பட வேண்டும், அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என அவர்கள் கருதிகிறார்கள்.

அரசியல் போர்

இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பின் தகவல்கள் வெளிவந்தால், முதலமைச்சர் நிதிஷ் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் நன்மை இருக்கும். 1990 காலகட்டத்தின் முற்பகுதியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜக ரத யாத்திரை மேற்கொண்டது. அதனை முறியடிக்கும் வகையிலும், நேர்த்தியான பதிலடியாகவும் OBC சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை மத்திய ஜனதா தள அரசு அமல்படுத்தியது. 

தொடர்ந்து, மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. சாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்காததற்கு மத்திய அரசு கூறும் காரணங்களில், இதேபோன்ற வன்முரை சூழ்நிலை குறித்த அச்சமும் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது. பாஜகவின் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறியிருந்தது. 

பாஜகவின் ரத யாத்திரையை கமண்டல அரசியல் என்றும், OBC உரிமை சார்ந்த போராட்டத்தை மண்டல் அரசியல் என்றும் பிகாரில் பொதுவாக கூறப்படும் நிலையில், கமண்டலம் vs மண்டல் அரசியலின் அடுத்த கட்ட நகர்வாக இந்த ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அரசியல் வல்லுநர்கள் பார்க்கிறார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.