புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த தச்சாங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் மூலம் டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என கூறியிருந்த நிலையில் விழா குழுவினரே 600க்கும் மேற்பட்ட டோக்கன்களை காளைகளுக்காக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கான ஆர்.பிசிஆர் கொரோனா சோதனை முறையாக மேற்கொள்ளப்படவில்லை, ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் முறையாக நிறைவடையவில்லை போன்ற காரணங்களால் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா குழுவினரும் பொதுமக்களும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கோட்டாட்சியர் முருகேசன், ஏடிஎஸ்பி கீதா, வட்டாட்சிய ராஜேஸ்வரி ஆகியோரை சிறைபிடித்து தச்சாங்குறிச்சி வாடிவாசல் அருகே போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனால் பொதுமக்களும் விழா குழுவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தச்சாங்குறிச்சியில் வரும் ஜனவரி 8ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் அறிவித்துள்ளார்.