தாமதமாகும் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக திறப்பு… அனுமதியின்றி கட்டப்பட்டதுதான் காரணமா?

120 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகம், தொல்லியல் துறை அனுமதி கிடைக்காமல் திறப்பு விழாவுக்காக காத்துக் கிடக்கிறது. இதன் பின்னணிய என்பது குறித்து ஆராய்ந்தோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக பொதுமக்கள் பலர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த 2019 ஆண்டு  ஜூலை மாதம் அப்போதைய முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி 2019 நவம்பர் முதல் செங்கல்பட்டு மாவட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் நிம்மதி  அடைந்தனர்.

புதிய மாவட்டத்திற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல புதிய துறைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இடநெருக்கடி காரணமாக இப்போதுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அத்துறைகள் யாவும் ஒன்றாக செயல்பட முடியவில்லை. இதனால் புதிய துறைகள் மற்றும் அதன் அதிகாரிகள், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒரு சிலர் வாடகை கட்டிடத்தில் அலுவலகங்கள் நடத்தி இயங்கி வருகின்றனர். இதனையடுத்து ஒரே கட்டிடத்துக்குள் ஒருங்கிணைந்து அலுவலகங்கள் இயங்குவதற்காக, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிதி ஒதுக்கப்பட்டது.

image
அதன்படி செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கட்டும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கான நிதியாக 119.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 18 மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.  பணிகள் துவக்கப்பட்டு மிக வேகமாக நடைபெற்று வந்தன. கொரோனா  பரவல் காரணமாக பணிகள் சற்று சுணக்கம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே  பணிகள் நிறைவடைந்தும், மாவட்ட ஆட்சியர் வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டப்பட்டுள்ள கட்டிடம் அமைந்துள்ள ஒரு பகுதி, தொல்லியல் துறை சார்பில் (ASI) பாதுகாக்கப்பட்டு வரும் இடம் என்று சொல்லப்படுகிறது.
image
இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் நம்மிடையே கூறுகையில், “பெருங்கற்கால மனிதர்கள் வாழ்விடமாக கருதப்படும் இடம் இது. இந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்கு முன்பாகவே இதற்கான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்று இருந்தால், இப்பொழுது மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடித்துவிட்டு காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது”  என கூறினார்.
image

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஸ்வநாதனிடம் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினோம். அவர் பேசுகையில், “மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. சிறு சிறு பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அனுமதி பெறாமல் கட்டப்பட்டது குறித்தெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது” என தெரிவித்தார்.
image

மாவட்ட நிர்வாகம் சார்பில் தடையில்லா சான்றிதழ் விண்ணப்பித்ததற்கு பிறகு, டெல்லியை சேர்ந்த ஒரு குழுவினர், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.‌ மேலும் ஒரு சிறு பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டு இடத்தில் அமைந்துள்ளதால், ஒருவேளை தடையில்லா சான்று கிடைக்காத பட்சத்தில், அந்தப் பகுதியை அகற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.