கடந்த 1968-ம் ஆண்டு வெளியான Romeo and Juliet திரைப்படம் அப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹிட். நான்கு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்ற இப்படத்தில் நடித்த நடிகரும், நடிகையும் புகழின் உச்சத்தை தொட்டனர். அந்தப் படத்தில் ரோமியோ மற்றும் ஜூலியட்டாக நடித்தவர்கள் ஒலிவியா ஹஸ்ஸி மற்றும் லியோனார்ட் வைட்டிங்.

இயக்குநர் பிரான்கோ ஜெஃபிரெல்லி இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கையில், ஒலிவியாவிற்கு 15 வயது, லியோனார்ட் வைட்டிங்கிற்கு 16 வயது. இவர்களிடம், `நெருக்கமான காட்சியில் நிர்வாணமாக நடிக்கத் தேவையில்லை, ஸ்கின் டிரெஸ் அணிந்துகொள்ளலாம்’ எனக் கூறிய இயக்குநர், பின்பு, `திரைக்கதையின் ஓட்டத்தில் நிர்வாணமாக நடித்தால்தான் படம் வெற்றி பெறும்’ எனக் கூறி, அவர்களை நிர்வாணக் காட்சியில் நடிக்க வைத்ததாக, இப்போது ஒலியாவும் வைட்டிங்கும் புகார் எழுப்பியுள்ளனர்.
தற்போது 71 வயதாகும் ஒலிவியா மற்றும் 72 வயதாகும் வைட்டிங், அப்போது தங்களை நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வைத்ததற்காக `பாரமௌன்ட் பிக்சர்ஸ் (Paramount Pictures)’ என்ற அமெரிக்க படத்தயாரிப்பு நிறுவனத்தின் மீது, டிசம்பர் 30-ம் தேதி சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த இரு நடிகர்களின் பிசினஸ் மேனேஜர் டோனி மரினோசி கூறுகையில், “இவர்களிடம் சொல்லியது வேறு, நடந்தது வேறு, இரண்டும் வேறு வேறு விஷயங்கள். இவர்கள் பிரான்கோவை நம்பினார்கள். பிரான்கோ அவர்களின் நண்பர். 16 வயதில் அவர்களால் என்ன செய்திருக்க முடியும்? அவர்களிடம் வேறு ஆப்ஷன் இல்லை. அப்போது Me Too-க்களும் இல்லை.

படத் தயாரிப்பின்போது ஹஸ்ஸிக்கு 15 வயது, வைட்டிங்கிற்கு 16 வயது. இந்த ஜோடி பல வருடங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தை இயக்கிய பிரான்கோ ஜெஃபிரெல்லி 2019-ல் காலமானார். இவர்களின் புகார் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை பெற்று வருகிறது.