ஆன்லைனில் ‘குழிமந்தி பிரியாணி’ வாங்கி சாப்பிட்ட 20 வயது பெண் பலி – கேரளாவில் தொடரும் சோகம்

உணவகத்திலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 20 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இந்த வாரத்தில் மட்டும் பிரியாணி சாப்பிட்டு ‘ஃபுட் பாய்சனால்’ இரண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்பது அங்கு சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடுக்கு அருகில் உள்ள பெரம்பல என்ற ஊரைச் சேர்ந்தவர் 20 வயதான அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர், கடந்த 31-ம் தேதி அருகில் உள்ள ரோமனிஷியா என்ற உணவகத்திலிருந்து குழிமந்தி பிரியாணி ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் உடல்நலக் கோளாறால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில், பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
எனினும் அஞ்சு ஸ்ரீபார்வதியின் உடல்நிலை மேலும் மோசமாக, அதன்பிறகு கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஆனாலும் அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். கோட்டயத்தைச் சேர்ந்த 33 வயதான ரேஷ்மி என்ற இளம் செவிலியர், இதேபோன்று உணவகத்திலிருந்து மந்தி பிரியாணி மற்றும் அல்பாமா சிக்கன் வாங்கிச் சாப்பிட்டு, உடல் நலக் குறைபாடுகளால் சிகிச்சை பலனின்றி கடந்த 2-ம் தேதி திங்கள் கிழமை உயிரிழந்த நிலையில், ஒருவாரத்திற்குள் மீண்டும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

ஒரு வாரத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டோர் ‘ஃபுட் பாய்சனால்’ சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், உணவுத் துறை அதிகாரிகள் அங்குள்ள உணவங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அஞ்சு ஸ்ரீபார்வதியின் உயிரிழப்பு தொடர்பாக பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஞ்சு ஸ்ரீபார்வதி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
image
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டிஎம்ஓ விசாரித்து வருகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த அஞ்சு ஸ்ரீபார்வதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்தப்பிறகே அடுத்தக்கட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இளம் பெண் வாங்கி சாப்பிட்ட உணவகத்தின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் சிக்கன் ஷாவர்மா சாப்பிட்ட காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தேவநந்தா உயிரிழந்த சுவடுகள் மறைவதற்குள், அடுத்தடுத்து நடந்து வரும் உயிரிழப்பு சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.