பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் வழியே தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்: ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை

சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் வழியே தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை சொந்த கிராமங்களில் கொண்டாட நகரப் பகுதியில் வசிக்கும் மக்கள் புறப்பட்டுச் செல்கின்றனர். இதற்காக பொங்கல் பண்டிகையையொட்டிய நாட்களில் முக்கிய நகரங்களில் இருந்து இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. குறிப்பாக சென்னையில் இருந்து சேலம், கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்களும், திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் ரயில்களும் நிரம்பி விட்டது.

இதனால், பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரத்தில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும், சென்னையில் இருந்து சேலம் வழியே எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அந்த சிறப்பு ரயில்களும் தற்போது நிரம்பிவிட்டது. இதனால், கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரியுள்ளனர். ஐதராபாத், விசாகப்பட்டணம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியே தென் மாவட்ட பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் அதிகளவு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மார்க்கத்தின் வழியாக பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகியவை மட்டுமே செல்கிறது.

இந்த ரயில்கள், பொங்கல் பண்டிகையையொட்டிய 12, 13, 14ம் தேதிகளில் முழுமையாக நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் அதிகளவு உள்ளது. அதனால், இம்மார்க்கத்தில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, \\”பொங்கல் சிறப்பு ரயில்களாக 5 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க பயணிகளின் கோரிக்கை வந்திருக்கிறது. அதனடிப்படையில் சென்னை மற்றும் கோவையில் இருந்து கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதனால், இன்னும் ஓரிருநாளில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.