சென்னை: “மற்ற மதங்கள் மீது வெறுப்பை காட்டுபவர்களே இந்து மதத்தின் எதிரிகள். மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்கள் விரோதிகள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதங்களுக்கு எதிரி இல்லை என்று கூறுபவர்கள் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார்களா என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தொன்மை காலத்திலிருந்து தமிழர்கள் விரும்பி கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதை வானதி சீனிவாசன் அறியவில்லையா தமிழர் திருநாளாக கொண்டாடுவதை அவர் அறிவாரா? மற்ற மதங்கள் மீது வெறுப்பை காட்டுபவர்களே இந்து மதத்தின் எதிரிகள். மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்கள் விரோதிகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சென்னையில் கடந்த 5-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் மதவாதத்துக்குதான் எதிரிகளே தவிர, மதத்துக்கு எதிரிகள் அல்ல. மதம் – சாதி வேற்றுமை மட்டுமல்ல, கோயில் – சாமி வேற்றுமையும் திராவிட மாடல் அரசுக்கு இல்லை” என்று பேசியிருக்கிறார்.
மதங்களுக்கு எதிரி இல்லை என்றால், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன் என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது மட்டுமல்ல, அவர்களின் மத நிகழ்வுகளிலும் முதல்வர் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொள்கின்றனர்.
நாங்கள் மதங்களுக்கு எதிரி இல்லை என்பது முதல்வரின் உள்ளத்திலிருந்து வந்திருந்தால், இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். மற்ற மதங்களின் கோயில்கள், மடங்களில் தலையிடாத மதச் சார்பற்ற அரசு, இந்து மத கோயில்கள், மடங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் மதங்களை மதிப்பது. அதுதான் உண்மையான மதச்சார்பின்மை” என்று தெரிவித்திருந்தார்.