சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்போது பிரபலமாகி இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. நடிகை மற்றும் தயாரிப்பாளரான இவர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’, ‘கேப்டன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார் மற்றும் இப்படத்தை அவரே தயாரித்து இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் இவர் பலரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார். கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு பலரையும் குறிப்பாக பெண்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்திருந்தார். ஒரு மல்யுத்த வீராங்கனை தனது குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் ஒரு ஆணாதிக்கவாதியை திருமணம் செய்துகொண்டு, பல விமர்சனங்களை எதிர்கொண்டு இறுதியில் தனது கனவை நிறைவேற்றினாரா? கணவனின் மனதை மாற்றினாரா? என்பதே இப்படத்தின் கதையாகும். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார், இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதியன்று வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் இந்த நடிகை தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற சில படங்களில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திற்குள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்துடன் அவர் ஒரு இதய எமோஜியையும் கேப்ஷனாக சேர்த்து பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்ததிலிருந்து ரசிகர்கள் பலரும் இவர் உண்மையாகவே அர்ஜுன் தாஸுடன் உறவில் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் புதிய படத்திற்கான ப்ரோமோஷனா என்று பலவிதனாக யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வர, கோலிவுட் வட்டாரத்தின் அடுத்த ஜோடி அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லக்ஷ்மி தானா என்று இணையதள பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது.