ஒடிசாவில் 15வது உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர்: சிலிர்க்க வைக்கும் இசை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்

ஒடிசா: ஆடவருக்கான 15வது உலக கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க விழா சிலிர்க்கவைக்கும் இசை நிகழ்ச்சி, கண்கவர் வானவேடிக்கைகளுடன் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அரங்கேறியது. தேசிய விளையாட்டாக போற்றப்படும் ஹாக்கி ஆட்டத்திற்கான உலகக்கோப்பை சாம்பியன் போட்டி. 1971ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இத்தொடரின் 15 வது பதிப்பு ஒடிசாவில் வரும் 13ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக இந்தியா இரண்டாவது முறையாக இத்தொடரை நடத்துகிறது.

இதை ஒட்டி கட்டாக்கில் உள்ள பராபதி  ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஹாக்கி தொடருக்கான கீதம் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ப்ரீதம் கம்போஸ் செய்த ஹாக்கி கே தில் மேரா பாடல் வெளியிடப்பட்டது. 11 பாடகர்கள் இணைந்து பாடி ரசிகர்களை பரவசப்படுத்தினர். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் உலக கோப்பை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் , சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர், இந்திய ஹாக்கி சம்மேளன தலைவர் திலீப் டிர்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது வானவேடிக்கைகள் ரசிகர்களை சிலிர்க்க வைத்தன. விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், திஷா பதானி ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ரசிகர்களை பரவசப்படுத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. போட்டிகள் முதலில் லீக் அடிப்படையில் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. இரு இடங்களிலும் ஒவ்வொரு அணியும் விளையாடும் விதமாக நிகழ்ச்சிநிரல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக வீரர்கள் எளிதில் செல்வதற்காக சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்திய அணி வரும் 13ம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.