போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிபொழிவு காரணமாக மாமரங்களில் பூக்கள் கருகி வருகிறது. இதையடுத்து பூக்களை பாதுகாக்க மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மா உறபத்தியில் முதன்மை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், சந்தூர், ஜெகதேவி, வேலம்பட்டி, தாதம்பட்டி, அந்தேரிப்பட்டி, கொடமாண்டப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு சுவை மிகுந்த ரகங்களான அல்போன்ஸா, தோதாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் போன்ற மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளதால் மா மரங்களில் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப் படுகிறது. தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் உருவான 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல வருடங்களுக்கு பிறகு பெய்த தொடர் மழையால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளன. 25 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பியுள்ளதால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். தற்போது மாமரங்களில் பூக்கள் பூக்கத் துவங்கியுள்ளது.
கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக 50 சதவீதம் பூக்கள் கருகியது. மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மா மரங்களில் உள்ள பூக்கள் கருக துவங்கி உள்ளது. இதனால் கவலையடைந்த விவசாயிகள், மாம்பூக்களை காப்பாற்ற மருந்து அடிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவகுரு கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த மா விவசாயிகள், இந்தாண்டு கை கொடுக்கும் என்ற இருந்த நிலையில், கடந்த மாதம் தொடர் மழை மற்றும் தற்போது கடும் பனிப்பொழிவால் மாம்பூக்கள் கருக துவங்கியுள்ளது. கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு மருந்துகள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. கூலி உயர்ந்த போதிலும், ேவலைக்கு ஆட்கள் கிடைப்பதே இல்லை. பெரும் சிரமத்துக்கு இடையே மா மரங்களை காப்பாற்றி வருகிறோம் என்றார்.