கொள்ளிடம் ஆற்றங்கரையில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம்: கொள்ளிடம் ஆற்றங்கரையில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையிலிருந்து ஆற்றுக்குள் சுமார் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் தூரத்துக்கு சீமை கருவேல முள் மரங்கள் வளர்ந்துள்ளன. கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் சரஸ்வதிவிளாகம், கொன்னகாட்டு படுகை, குத்தவக்கரை, சந்தபடுகை, திட்டுபடுகை, அளக்குடி, காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சீமை கருவேல முள் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இவைகள் மிக ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது. சுற்றுச்சூழலை பாதிக்க கூடியது. இந்த மரங்களிலிருந்து வெளியேறும் வாயுக்கள் விஷத்தன்மை வாய்ந்தது. இதன் விறகுகளை தீயிலிட்டு எரிக்கும் போது வெளியாகும் புகை மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை கருதியே இந்த முள் மரங்கள் பல இடங்களில் அகற்றப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் தொடர்ந்து வளர்ந்துள்ள இந்த மரங்கள் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அடுப்பு எரிப்பதற்கு கூட இதனை மக்கள் பயன்படுத்தவில்லை.

இந்த மரங்களிலிருந்து விழும் கிளைகளில் முட்கள் நிறைந்துள்ளதால் சில தினங்களில் காய்ந்து காற்றில் பறந்து ஆற்றுப்பகுதியில் செல்பவர்கள் காலில் குத்துகிறது. மேலும் கால்நடைகளுக்கும் கால்களில் குத்துவதால் அவதி அடைந்து வருகின்றன. கொள்ளிடம் ஆற்றின் சுகாதாரமும் இதனால் கெடுகிறது.
ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் போது கருவேல முள் மரங்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதி வழியே தண்ணீர் செல்லும் போது இந்த செடிகளின் கிளைகள் முட்களுடன் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றுநீரில் கிடப்பதால் ஆற்றில் நீராடும் கரையோர கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் எந்த பயனும் இன்றி விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையூறாக வளர்ந்துள்ள சீமை கருவேல முள் மரங்களை முற்றிலும் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக பயன் தரும் மரங்களை வைத்து பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.