கன்னியாகுமரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி அருள்பாபி (48). இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால், சாஸ்த்தாங்கரை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டு வரவில்லை என்பதால் அவரது நண்பர்கள் நேற்று அருள்பாபியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த நண்பர்கள் இதுகுறித்து குளச்சல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அருள்பாபி வலது நெற்றியில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது அருகில் மது பாட்டில் மற்றும் மிச்சர் பொட்டலங்கள் கிடந்துள்ளது.
இதையடுத்து அருள் பாபின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அருள்பாபி எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.