பீஜிங்-இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகம், கடந்த 2022ல், இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. கிட்டத்தட்ட 11.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக, சீன சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
8.4 சதவீதம் அதிகரிப்பு
மேலும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும், முதன் முறையாக, 100 பில்லியன் டாலரை அதாவது, 8.20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீன சுங்கத் துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டில், இந்தியாவுடனான வர்த்தகம், அதற்கு முந்தைய 2021ம் ஆண்டை விட 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு ஆண்டில், சீனா, இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 9.72 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளது. அதேசமயம் இந்தியாவிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதி மதிப்பு 1.43 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முந்தைய 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 21.7 சதவீதம் சரிவாகும்.
இதையடுத்து, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 8.28 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய 2021ல், இது 5.69 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
![]() |
இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பதற்றங்கள் இருந்த போதிலும், வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாகவும்; சீனா, இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வருவதாகவும், சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வளர்ச்சி
இருதரப்புக்கும் இடையேயான வர்த்தகம், ஆண்டுக்கு 12.55 சதவீதம் எனும் அளவில் வளர்ச்சி பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி, கடந்த 2022ல் 7 சதவீத வளர்ச்சியையும்; இறக்குமதி 1.1 சதவீத வளர்ச்சியையும் அடைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்