இஸ்லாமாபாத்: லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி வந்த ஓமன் ஏர் விமானத்தின் உடமைகள் சோதனையிடப்பட்டன. அப்போது, யுரேனியம் தடவிய சரக்கு பெட்டகத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, இங்கிலாந்தின் காவல் துறை, தீவிரவாத எதிர்ப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தது. அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கராச்சியில் இருந்து வந்ததா?: இதுகுறித்து சன் நாளிதழ், இந்த கதிர்வீச்சுள்ள யுரேனிய பார்சல் காரச்சியில் இருந்து வந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த ஈரானிய நாட்டவருக்கு பார்சல் அனுப்பப்பட்டதாகவும் முதன்முதலில் செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ராவை மேற்கோள்காட்டி டான் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்ட யுரேனியம் பூசிய சரக்கு பெட்டகம் கராச்சியிலிருந்து அனுப்பியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
மேலும், இங்கிலாந்து இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்துக்கும், தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று மும்தாஜ் கூறியுள்ளார். இவ்வாறு டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
யுரேனியம் என்பது பாறைகளில் காணப்படும் ஒரு கதிரியக்க உலோகமாகும். இது, பொதுவாக, அணுமின் நிலையங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனை, அணு ஆயுதங்களிலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.