நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ராசிபுரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் நகராட்சி ஆணையர் அசோக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் நகராட்சி ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்பட்டதால் தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க பணமில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போனஸ் வழங்காத நகராட்சி ஆணையரை கண்டித்து அனைத்து கட்சி நிர்வாகிகளும், தூய்மை பணியாளர்களும் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரை நிர்வாணமாக கையில் தட்டேந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளிடமும், தூய்மை பணியாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என உறுதியாக தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் அவ்வழியாகச் சென்ற வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் திமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஆகியோர் போராட்டத்தைக் கண்டு தூய்மை பணியாளர்களிடம் பேசி உள்ளனர். அப்பொழுது அவர்களை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனை அடுத்து அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் பொங்கல் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டக்காரர்கள் திமுக அமைச்சரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும் முற்றுகையிட்டதால் ராசிபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு தோற்றுக் கொண்டது.