மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 49 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்று வருகிறது.
அரசுத் தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
போட்டி தொடங்கியதில் இருந்தே வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளைப் பிடித்து வருகின்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை களத்தில் இருந்த வீரர்கள் மடக்கிப்பிடித்து அடக்கினர். காளைகள் முட்டியதில் இதுவரை 23 பேர் படுகாயமும், 26 பேருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டன. படுகாயமடைந்த 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
30 நிமிடம் நீட்டிப்பு: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11 சுற்றுகளில் காளைகள் அவிழ்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டி மேலும் 30 நிமிடம் நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கூடுதல் நேரத்திலும், காளைகள் அவிழ்க்கப்பட்டன. தொடர்ந்து 10 சுற்றுப் போட்டிகளில் அதிகமான காளைகளைப் பிடித்த வீரர்கள் மட்டும் இறுதி மற்றும் கடைசி சுற்றான 11-வது சுற்றுப் போட்டிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.