ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதாக சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய அவர், தாம் விலகியதற்கு மாநில தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தமிழக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலின்படி அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும்.
சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
newstm.in