சென்னை: பொங்கல் திருநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையான இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களிலும், புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனை வணங்கி பொதுமக்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வரின் வருகையையொட்டி, அண்ணா மற்றும் கருனாநிதியின் நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.