“அணுசக்தி நாடு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உதவிகேட்பது வெட்கக்கேடானது" – பாகிஸ்தான் பிரதமர்

பொருளாதார வீழ்ச்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால், நமது அண்டை நாடான பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் இருக்கிறது. அதனால், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பாகிஸ்தான் மக்கள் பரிதவித்துவருகின்றனர். பாகிஸ்தான் முழுவதும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

கோதுமை மாவுக்காக அடித்துக்கொண்ட மக்கள்

கடந்த வாரம் முதல், கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் மாவு விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு மாவு பாக்கெட் 3000 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன் உச்சமாக, பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள பெரும்பாலான நகரங்களில் கோதுமை மாவுக்காக பொதுமக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், கோதுமை வாங்குதற்காக அதிக அளவிலான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு ஐந்து பேர் பலியான சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ஜே.கே.ஜி.பி.எல் கட்சியின் தலைவர் பேராசிரியர் சஜ்ஜத் ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோவில், ஒரு குழு லாரியை துரத்திச் செல்லும் வீடியோவை பதிவிட்டு, “இது மோட்டார் சைக்கிள் பேரணி அல்ல, பாகிஸ்தானில் மக்கள் கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் லாரியை, வெறும் 1 பை கோதுமையாவது வாங்கலாம் என்ற நம்பிக்கையில் துரத்துகிறார்கள். ஜம்மு – காஷ்மீர் மக்கள் பாக்கிஸ்தானியராக இருக்காதது அதிர்ஷ்டம். நமக்கு எதிர்காலம் உண்டா?” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் நிர்வாக சேவையின் (பிஏஎஸ்) தகுதிகான அதிகாரிகளின் தேர்ச்சி விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “அணுசக்தி நாடு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் யாசகம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது. கடன் கேட்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது.

ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டுக் கடன்களை நாடுவது சரியான தீர்வாகாது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பாகிஸ்தானுக்கு மேலும் 1 பில்லியன் டாலர் கடன் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.