மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: பட்டத்துக் காளையை வணங்கி மகிழ்ந்த பொதுமக்கள்! எங்கே தெரியுமா?

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கம்பம் தம்பிரான் மாட்டுத் தொழுவத்தில் உள்ள பட்டத்துக் காளையை பொதுமக்கள் வணங்கி வழிபாடு நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீநந்தகோபால சுவாமி தம்பிரான் மாட்டுத் தொழுவத்தை அப்பகுதி மக்கள் கோயிலாக வழிபட்டு வருகின்றனர். இங்கு மூலவர் என்று தனி சன்னிதானம் ஏதும் கிடையாது. தொழுவத்தில் வளர்க்கப்படும் காளைகளில் ஒன்றை பட்டத்துக் காளையாக தேர்ந்தெடுத்து அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
image
இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த தொழுவத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டு பொங்கலன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தாங்கள் வளர்க்கும் பசு மாடுகள் உடல் நலம் வேண்டி, இந்த தொழுவத்திற்கு புதிதாக மாடுகள் வாங்கி நேர்த்திக் கடனாக செலுத்துவர்.
image
அதோடு மட்டுமல்லாமல், தை இரண்டாம் நாள் பிறக்கின்ற கன்றுகளை இந்த தொழுவத்திற்கே கொடுத்து விடுவர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சிறப்பு வழிபாடு மாட்டு பொங்கல், தை இரண்டாம் நாளான இன்று நடைபெற்றது. காலையில் இருந்தே தேனி மாவட்ட மக்கள், விவசாயிகள், பொது மக்கள் என ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் குவியத் தொடங்கினர். இதையடுத்து பெண்கள், தொழுவத்தின் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த பட்டத்துக் காளையை பக்தர்கள் வணங்கிச் சென்றனர்.
image
இந்த ஒருநாள் வழிபாட்டிற்காக மலைகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் என பலரும் அகத்திக்கீரை, சோளத்தட்டை, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை அளித்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.