புதுடெல்லி: இந்திய ரயில்வே பணியில், 1997ல் பொறியாளர் பிரிவில் அதிகாரியாகச் சேர்ந்த ஜிதேந்தர் பால் சிங், அசாம் மாநிலம் கவுகாத்தி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளராக உள்ளார். இவர், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், ஜிதேந்தர் பால் சிங், அவரது உதவியாளர் ஹரி ஓம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் (ஏடிஆர்எம்) ஜிதேந்தர் பால் சிங் மற்றும் 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ஒப்பந்தங்களை பெறுதல், நிலுவையில் உள்ள பில்களுக்கு முன்கூட்டியே பணம் வசூலித்தல், தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுதல் போன்ற புகார்கள் 8 பேர் மீதும் நிலுவையில் இருந்தது. அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கினர்.
டெல்லியை சேர்ந்த ஹவாலா கும்பல் மூலம் லஞ்சம் பெறுவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன. டெல்லி, நரோரா, கவுகாத்தி, சிலிகுரி, அலிகார் ஆகிய இடங்களில் உள்ள 8 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரூ. 47 லட்சம் ரொக்கம், மடிக்கணினிகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 8 பேரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ என்றன.