நாயிடமிருந்து தப்பிக்க 3-வது மாடியிலிருந்து குதித்த டெலிவரி பாய்! இறுதியில் நேர்ந்த துயரம்

வாடிக்கையாளரின் வளர்ப்பு நாயிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மூன்றாவது மாடியில் இருந்து குதித்த உணவு டெலிவரி நபர் இறந்த சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் இன்று அனைத்துப் பொருட்களும் ஆன்லைன் மூலம் கிடைக்கப் பெற்று வருகின்றன. அந்த வகையில் உணவு வகைகளும் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது. அப்படி, உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர் முகம்மது ரிஸ்வான்.
இவர், கடந்த 11ஆம் தேதி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்துவரும் ஷோபனா என்பவருக்கு உணவு டெலிவரி செய்யச் சென்றார்.
image
3வது மாடியிலிருந்து குதித்த டெலிவரி ஊழியர்
அப்போது ஷோபனா, கதவைத் திறந்ததும் அவ்வீட்டினுள் இருந்த வளர்ப்பு நாய் ரிஸ்வானை விரட்டியுள்ளது. அதில் பயந்துபோன ரிஸ்வான், நாயிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். அதனால், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை, அங்குள்ளவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ரிஸ்வானின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி (நேற்று  முன்தினம்) அவரது உயிர் பிரிந்தது.
இதனையடுத்து, ஷோபனாவின் கவனக்குறைவே ரிஸ்வான் உயிரிழக்கக் காரணம் எனக் கூறி, அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல்துறை ஷோபனாமீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
வளர்ப்பு நாயால் அதிகரிக்கும் சம்பவங்கள்
இதேபோல் கடந்த ஆண்டுகளிலும் சில நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன. அதில், டெல்லியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த நபரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்திருந்தது. அரியானா மாநிலத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சாலையில் நடந்து சென்ற 30 வயது முன்னி என்ற பெண்ணை, வளர்ப்பு நாய் ஒன்று கடித்தது. 
image
பஞ்சாப் மாநிலத்தில் வளர்ப்பு நாய் ஒன்றால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனுக்கு அவனுடைய காது பயங்கர காயமுற்றது. அதுபோல், உத்தரப்பிரதேசம் கைசர்பாக் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் சுசீலா திரிபாதி என்பவரை அவரது வீட்டிலேயே வளர்த்து வந்த பிட்புல் நாய், கடித்துக் கொன்றதும் நினைவிருக்கலாம்.
அதற்குப் பின்னர், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் லிஃப்டில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை, வீட்டு வளப்பு நாய் ஒன்று கடித்தது. இதில், வலியால் துடித்துக்கொண்டு இருந்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது.
image
அதுபோல், மும்பையில் டெலிவரி நபர் ஒருவரை, லிஃப்டில் இருந்த ஜெர்மன் ஷெப்பர்டு வளர்ப்பு நாய் அவருடைய அந்தரங்க பகுதியில் கடித்துக் குதறிய வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. விலங்குகளை வளர்ப்பதில் தவறில்லை; ஆனால் அவற்றால் பிறருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் ஓனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.