சிவகங்கை மாவட்டத்தை அடுத்த திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் நடைபெற்றும் மஞ்சுவிரட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த மஞ்சுவிரட்டானது ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பார்வையாளர்கள் பார்க்கக்கூடிய வகையில் 100 ஏக்கர் பரப்பளப்பில் நடைபெறும். இந்த நிலையில் நடைபாண்டு மஞ்சுவிரட்டில் தமிழக அரசின் நெறிமுறைகளை கடைப்பிடித்து 300க்கும் மேற்பட்ட காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் 250 காளைகளுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அதேபோன்று இந்த மஞ்சுவிரட்டில் 150 பேர் மட்டுமே பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த மஞ்சுவிரட்டை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கொடியசைத்து இன்று காலை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த மஞ்சுவிரட்டு தொடக்க நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மஞ்சுவிரட்டில் 250 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டாலும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட காளைகள் தனித்தனியாக அவிழ்த்த விடப்பட்டுள்ளன. அவ்வாறு அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று மதுரை மாவட்டத்தை அடுத்த சுக்காம்பட்டியைச் சேர்ந்த மதுசூதனன் என்பவரை நெஞ்சில் முட்டியதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
மதுசூதனனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது ஆம்புலன்ஸில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் 100க்கும் மேற்பட்டோர் மஞ்சுவிரட்டு போட்டியில் காயமடைந்து சிகிச்சையாக சிவகங்கை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்பவர் போட்டி நடைபெறும் இடத்திலேயே காளை முட்டியதில் உயிரிழந்தார்.