கோல்கட்டா: உத்தரகண்டின் ஜோஷிமாத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என மே.வங்கத்தின் முதல்வர் மம்தா கூறியுள்ளார்.
மலைகளால் சூழப்பட்ட மாநிலமான உத்தரகண்டின் ஜோஷிமாத் என்ற இடத்தில் உள்ள சில கட்டடங்களில் சில நாட்களாக விரிசல் ஏற்பட துவங்கின. இரண்டு ஹோட்டல்கள் லேசாக சரிந்த நிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக ஜோஷிமத் அறிவிக்கப்பட்டது.
அப்பகுதியில் வசித்த 4,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. அங்குள்ள நிலவரத்தை மத்திய – மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில் கோல்கட்டாவில் செய்தியாளர்களை சந்திப்பில், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னரே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு முன்கூட்டியே இது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
நாங்கள் ராணிகஞ்ச் இடத்தில் இதே பிரச்னையை எதிர்கொள்கிறோம். ராணிகஞ்சில் நிலக்கரி இந்தியா நிறுவனத்தால் இதே பிரச்சனை உள்ளது. இதனால் 30,000 பேர் பாதிக்கப்படுவார்கள். ஜோஷிமாத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜோஷிமாத் நகரில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் அபாயமானது. இதற்கு எந்த வகையிலும் அங்குள்ள மக்கள் பொறுப்பாக முடியாது. பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

நீதித்துறையின் சுதந்திரத்தை நாங்கள் விரும்புகிறோம். கொலிஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதித்துவம் இருந்தால், மாநில அரசும் தங்கள் பிரதிநிதிகளை கொலிஜியத்தில் சேர்க்கும். ஆனால் மாநில அரசின் பரிந்துரைகளுக்கு எந்த மதிப்பும் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement