ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலா தனிக்கட்சி.. ஜெயக்குமார் போட்டுக்கொடுக்கும் ரூட்…

ஜெயலலிதாவின் தோழி
சசிகலா
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆளுநர் ரவி அரசியல் செய்து வருவதாகவும், சட்டசபையில் அவரது உரை குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித் சசிகலா, ஆளுநர் உரை குறித்து ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.

அரசு தயாரித்த உரையின் நகலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஏதாவது திருத்தம் இருந்தால் ஆளுநர் செய்து அனுப்புவார். அதற்கு பிறகு இரண்டாவது முறையாக உரையின் நகல் அனுப்பி வைக்கப்படும். ஆனால், ஆளுநர் ரவி விவகாரத்தில் இப்படி நடந்ததா என்று எனக்கு தெரியாது என்றார்.

ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசு ஒழுங்காக தர வேண்டும். ஆளுனருடன் சண்டையிட்டு கொண்டே இருந்தால் வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாது என்றார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட திட்டம் இருக்கா என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, நிச்சயமாக உள்ளது என்று கூறிய சசிகலா திமுகவை வீழ்த்த நாங்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் கூறியது; சசிகலா யார் இதுகுறித்தெல்லாம் பேச? அவர் அதிமுகவில் மூக்கை நுழைக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில் அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். அதிமுக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக இருக்கிறது. சசிகலா ஆயிரம் கருத்துகள் சொல்லலாம்.

ஆனால் அதெல்லாம் யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. அவர் எவ்வளவோ கருத்துகளைக் கூறினார், அதிமுகவைப் பொறுத்தவரை அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. சசிகலா ஒன்றை மட்டும் செய்யலாம்; ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றிணைந்து தனிக்கட்சி ஆரம்பித்தால் நல்ல விஷயம்தான். அதற்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். இது ஜனநாயக நாடு, கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

தமிழ்நாட்டின் தற்போதைய எதார்த்த அரசியலின்படி பிளவு பட்டுள்ள அதிமுக எதிரிகளை வீழ்த்தவாவது இணைய வேண்டியது அவசியம் என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று சசிகலா, ஓபிஎஸ் கூறுவதை எடப்பாடி க்ரூப் உதாசினப்படுத்துவதால் முக்குலத்தோர் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.