சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 8 மணி முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
வண்டலூர் பூங்காவில் 180 வகையான இனங்களை சார்ந்த 2 ஆயிரத்து 500 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
பராமரிப்பு காரணங்களுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும். செவ்வாய்க்கிழமையான இன்று (ஜன.17) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவர். இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (ஜன.17) திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்தது.
இதன்படி காலை 8 மணிக்கு வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது. அப்போது முதல் பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால், 20 டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை சோதனையிடும் வரிசைகளும் 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் வசதிக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பூங்காவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது. பூங்காவின் பல்வேறு இடங்களில் சிறப்பு உதவி மையம், மருத்துவ உதவி மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 23 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.