நடிகர் புனித் ராஜ்குமாரின் 23 அடி உயர சிலை

பெங்களூரு:-

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான இவரை கன்னட மக்கள் பவர் ஸ்டார், அப்பு என செல்லமாக அழைத்து வந்தனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நடைபயிற்சி சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவு அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்றோருக்கும் அவர் பல்வேறு உதவிகளையும் நலத்திட்டங்களையும் செய்து வந்துள்ளார். அவரை கவுரவப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு கன்னட ரத்னா விருதை அவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பல்லாரி டவுனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அவரது முழு உருவ சிலையை நிறுவ அவருடைய ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி புனித்ராஜ்குமாரின் 23 அடி உயர சிலையை சிவமொக்கா மாவட்டம் நிதிகே கிராமத்தில் பிரபல ஜீவன் சிற்ப கலா குழுவை சேர்ந்த 15 சிற்பிகள் அடங்கிய குழுவினர் 3 மாதங்களாக இரவு-பகலாக வடிவமைத்தனர். களி மண்ணால் வடிவமைத்து அதன் மேல் பகுதியில் இரும்பு மற்றும் வெண்கல தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிலை வடிவமைக்க 22 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. புனித்ராஜ்குமாரின் உருவம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை லாரி மூலம் பல்லாரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி 20 சக்கர லாரியில் நேற்று அந்த சிலை புறப்பட்டது. இந்த சிலை வருகிற 21-ந்தேதி பல்லாரியில் நிறுவப்படுகிறது. இந்த சிலையை மாநில போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு திறந்துவைக்கிறார். விழாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித்ராஜ்குமார், சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார் மற்றும் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.