கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பைக் ஓட்டி செல்லும் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறம் நபர் ஒருவரை 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த பைக் ஓட்டுநர், இந்த நபரின் கார் மீது மோதி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து கீழே இறங்கிய கார் ஓட்டுநர், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நிற்கும்படி கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் நிற்காமல் தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்கும் நோக்கில், முயன்று முடிவில் அவரது பைக்கின் பின் பகுதியை கார் ஓட்டுனர் பிடித்துள்ளார். இதனால், வழியெங்கும் அவரை இழுத்து கொண்டே பைக்கில் சென்றவர் பயணித்து சென்றுள்ளார்.
அதன்பின்பு, மற்றொரு பைக்கில் வந்த நபர் ஒருவர் மற்றும் ஆட்டோவில் வந்தவர் உதவியுடன் அந்த பைக் நிறுத்தப்பட்டது. பைக்கில் இழுத்து செல்லப்பட்ட நபரின் ஆடைகள் கிழிந்து இருந்தன. அவர் மெதுவாக எழுந்து வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில், கார் ஓட்டுநர் முத்தப்பா (55) என தெரிய வந்துள்ளது. அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். பைக் ஓட்டி சென்றவரை பிடித்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பைக் ஓட்டி சென்றவருக்கும், சாலையில் வந்தவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.