பழனி கோயில் கும்பாபிஷேகம்… முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டு கோவில் கோபுரங்கள், பதுமைகள் ஆகியவை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நன்மங்கள இசை மற்றும் விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேகத்திற்கான வேள்விச் சாலை நிகழ்ச்சிகள் இன்று மாலை துவங்குகிறது.

எட்டுக்கால வேள்விகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவில் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோவில்கள், கோபுரங்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று காலை தங்க விமானம், ராஜகோபுரம், வடக்கு தெற்கு கோபுரங்கள், விமானங்கள், மலைக்கோவில் உள் திருச்சுற்று கோவில்கள் உள்ளிட்ட 50 கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு நவதானியங்கள், நவரத்தினங்கள் ஆகியவற்றுடன் கோபுரங்களில் பொறுத்தும் பணி நடைபெற்றது‌.

இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதற்கான இணையதள பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. வருகிற விருப்பமுள்ள பக்தர்கள் http://www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் http://www.hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களில் இன்று முதல் வருகிற 20 ஆம் தேதி வரை தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களில் இரண்டாயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ” பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு முன்பும், குடமுலுக்கின் போதும், குடமுழுக்கு பின்பும் நடைபெறும் அனைத்து வகை அர்ச்சனை மற்றும் வழிபாடுகளில் சரிபாதியாக தமிழ் மந்திர வழிபாட்டை இடம்பெறச் செய்ய தமிழ்நாடு அரச ஆவன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகிற ஜனவரி 20 ஆம் தேதி பழனி மாவட்டம் மயில் ரவுண்டானாவில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று மணியரசன் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.